வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது.
மச்சிலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நர்சபூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை மோன்தா புயல் கரையைக் கடந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கரையைக் கடந்த மோன்தா புயல் அதிகாலை 2.30 மணியளவில் தீவிரம் குறைந்து புயலாக வலுவிழந்த நிலையில் நர்சபூருக்கு மேற்கு-வடமேற்கில் சுமார் 20 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இது கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் புயலாகவே தொடர்ந்து நீடிக்கும்.
அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அது மேலும் பலவீனமடையவும் வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிஹார் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் புதுவையின் ஏனாம் பகுதியிலும் தெற்கு ஒடிசாவிலும் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் ஆங்காங்கே அதி கனமழை பெய்யக்கூடும்.
அதே போன்று வடக்கு ஒடிசாவிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவிலும் சத்தீஸ்கரிலும் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

