மத்திய பிரதேசத்தில் இருமல் சிரப் மருந்து அருந்திய 22 குழந்தைகள் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு அரசின் கடும் அலட்சியமே காரணம் என்று மத்திய பிரதேச பொது சுகாதாரத் துறை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் கூறியுள்ளார்.
வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மருந்துகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்றும் அமைச்சர் படேல் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் நெருக்கடியால் தமிழகம் மீது குற்றம்சாட்டப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கோல்ட்ரிஃப் உடன் சேர்த்து மேலும் 2 இருமல் சிரப் மருந்துகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.
RESPIFRESH TR மற்றும் RELIFE ஆகிய 2 இருமல் மருந்துகளும் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நாடெங்கும் உற்பத்தி செய்யப்படும் இருமல் மருந்துகளின் தரத்தைச் சோதித்து ஆவணங்களை தணிக்கை செய்ய மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மறுபுறம் இந்தியாவில் நச்சுத்தன்மை வாய்ந்த இருமல் மருந்தைக் குடித்ததால் 17 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் விற்கப்படும் மருந்துகளின் தரச் சோதனையில் ஒழுங்குமுறைக் குறைபாடு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சுட்டிக்காட்டியுள்ளது.
நச்சுத்தன்மை வாய்ந்த இருமல் மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என இந்தியா உறுதிப்படுத்தியதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

