சென்னை – நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 1, 440 பேர் பயணிக்கலாம்.
சென்னையில் இருந்து நெல்லைக்கு பகல் நேரத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லையில் இருந்து காலை 6.05 மணிக்கு ரயில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை ரயில் நிலையத்தை வந்தடையும். இதே போல, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அன்று இரவு 10.40 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை அடையும்.
இந்த வழித் தடத்தில் முதன் முதலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டபோது, இந்த ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் பயணிகள் விரைவாக ஊர்களுக்கு செல்ல முடிந்ததால் இந்த ரயிலுக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால், அதிக அளவிலான பயணிகள் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய தொடங்கினர். தற்போது, இந்த ரயிலில் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, சென்னை, நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கு கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, தற்போது, 16 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, இன்று முதல் கூடுதலாக 4 பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
தற்போது, சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை ஆகியவை நெருங்கி வரும் நிலையில், ஏராளமான பொது மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இவர்களின் வசதிக்காக வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டது பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல, வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை விரைவாக இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

