கரூரில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த பெண்ணின் செயினை மர்ம நபர் ஒருவர் அறுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகிலுள்ள முடிகொண்டான் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகில், பனங்காட்டான்குடி தமிழர் தெருவை சேர்ந்த ரம்யா என்ற இளம்பெண் நேற்று தனது உறவினர் வீட்டு விழாவிற்கு சென்று இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்திருக்கிறார். ரம்யாவை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ரம்யாவின் தங்க தாலிச்செயினை பறிக்க முயன்றுள்ளனர்.
2 பவுன்
ரம்யா தாலிச்செயினை கெட்டியாக பிடித்துக்கொண்ட போதிலும் தங்க தாலியின் ஒரு பகுதியே மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அந்த ஒரு பகுதியின் செயின் 2 பவுன் ஆகும். இதுகுறித்து ரம்யா நன்னிலம் பகுதி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கதுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதேபோல் தமிழகத்தில் இன்று இரு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
கரூர்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமானுஜ நகரானது தனி குடியிருப்பு பகுதியாகும். இந்த பகுதியில் சுமார் 60 வீடுகள் உள்ளன. இந்த பகுதியை சுற்றியும் தடுப்பு சுவர்கள் எழுப்பபட்டு இருக்கும். இதனால் வெளி நபர்கள் யாரும் உள்ளே வர முடியாது. இந்த நிலையில் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் காலை நேரங்களில் நடைபாதை வாயிலாக நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.
நடைபயிற்சியின் போது
இன்று காலையில் ராமானுஜ நகர் சரகத்திற்கு உட்பட்ட குமார சாமி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மூன்று பெண்கள் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அப்போது பின் பக்கமிருந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அதில் ஒருவர் வண்டியை விட்டு கீழே இறங்கி நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் உள்ள செயினை பறிக்க முயன்றார்.
தோல்வியில் முடிந்த முயற்சி
அந்த பெண் தன் கழுத்தில் உள்ள செயினை வலுவாக பிடித்துக்கொண்டதால் மர்ம நபரின் முயற்சி தோல்வியடைந்தது. மேலும், அந்த மர்ம நபர் அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு, இருசக்கர வாகனத்தில் பறந்து விட்டார். சிறு காயங்களோடு தப்பிய அந்த பெண் அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து கரூர் மாநகராட்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரம் இடும்பன் கோவில் பகுதியில் வசித்து வரும் தங்கப்பொண்ணு என்னும் பெண் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக அருகிலுள்ள கடைக்கு வந்துள்ளார். அப்போது மளிகை பொருட்கள் வாங்குவதுபோல் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் தங்க பொண்ணு அணிந்திருந்த 3 பவுன் செயினை திருடிக்கொண்டு தப்பி ஓடினான்.
இதுகுறித்து தங்கப்பொண்ணு அருகிலுள்ள காவல் துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து மர்ம நபர்களை அடையாளம் கண்டு தேடிவருகின்றனர்.
இதுபோன்ற தொடர் செயின் பறிப்பு குற்றங்களால் பொதுமக்கள் முக்கியமாக பெண்கள் வெளியே வருவதற்கு அச்சமடைகின்றனர்.