கோவையில் பெண் கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
டிஜி பி யின் உத்தரவு
தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுவதும் தடுக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் போதை பொருட்கள் தடுப்பு பணிகள் தீவிரமாகியுள்ளன.
ரகசிய தகவல்
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த காங்கேயம் பாளையம் ராயர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தினர்.

உதவியை மறுத்த இளம்பெண்
இந்நிலையில், இன்று காலையில் இளம் பெண் ஒருவர் தூக்கமுடியாத அளவில் கைப்பைகளை சுமந்துகொண்டு வந்திருக்கிறார். இவருக்கு உதவ எண்ணிய ஆய்வாளர் மாதையன் ரோந்து வாகனத்தில் இருந்த காவல் ஊழியர்களை அந்த பெண்ணிற்கு உதவி செய்ய அனுப்பி வைத்தார். காவலர்களின் உதவியை அந்த பெண் மறுத்ததால் காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். அந்த பெண் வைத்திருந்து பையை சோதனை செய்ததில் பண்டல் பண்டலாக கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண்ணை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

கஞ்சா வியாபாரம்
விசாரணையில் அவர் உசிலம்பட்டியை சேர்ந்த மயில்சாமி என்பவரின் மனைவி ஜெய பாண்டியம்மாள் என்பதும் இவர் தேனி உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, காங்கேயம் பாளையம் பகுதியில் பதுக்கி வைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
50 கிலோ கஞ்சா
இதனையடுத்து காங்கேயம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் ஜெய பாண்டியம்மாள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா விற்பனைக்கு உதவிய மதுரையை சேர்ந்த ராஜேஷ் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

