பிரம்மோஸ் ஏவுகணையிடம் இருந்து இந்தியாவின் எதிரிகள் தப்பிக்க முடியாது என்றும் பிரம்மோஸ் ஏவுகணையின் மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்கி அழிக்க முடியும் என்றும் பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது.
பயங்கரவாதிகளின் தளங்கள் பயிற்சி முகாம்கள் மட்டுமில்லாமல் பாகிஸ்தானின் விமானப் படை தளங்களையும் தாக்கி அழிக்கப் பட்டன.
இந்த இராணுவ நடவடிக்கையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகளின் பங்கு உலக அளவில் இந்தியாவின் பாதுகாப்புத் திறனைப் பறைசாற்றியது.பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் உற்பத்தி தொழிற்சாலைகள் ஹைதராபாத், நாக்பூர், பிலானி, திருவனந்தபுரம் மற்றும் லக்னோவில் அமைந்துள்ளன.
இந்தியா தனது முதல் பிரம்மோஸ் ஏவுகணையை 2001 ஜூன் 12ம் தேதி சோதித்தது.
2005ம் ஆண்டு முதல் இந்திய கடற்படையில் பிரமோஸ் உள்ளது.
2007-ல் இந்திய ராணுவத்தில் பிரமோஸ் சேர்க்கப்பட்டது.
அனைத்து விதமான வானிலைகளிலும் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றவகையில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
பிரம்மோஸை 21ம் நூற்றாண்டின் பிரம்மாஸ்திரம் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் ஆலையில் கடந்த மே மாதம் முதல் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப் பட்டு வருகின்றன.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyeniya இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வடிவமைத்துள்ளன.
இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் தொகுப்பு பிரமோஸ் ஏவுகணைகளை பயன்பாட்டுக்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும் அண்மையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பிரமோஸ் வெறும் ஏவுகணை அல்ல இந்தியாவின் பாதுகாப்பு நம்பிக்கையாகும். புதிய இந்தியாவின் எழுச்சியின் அடையாளமாகும். முப்படைகளிலும் முக்கிய சக்தியாக விளங்குகிறது.
மேம்பட்ட ராம்ஜெட் இயந்திரத்துடன் கூடிய புதிய பிரமோஸ் ஏவுகணை அதிக உயரத்தில் பறக்கும் திறனும் கூடுதல் காற்றியக்க செயல்திறனும் பெற்றுள்ளது.
புதிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட தூரம் சுமார் 800 கிலோமீட்டர்கள் ஆகும்.
பாகிஸ்தானின் கிட்டத்தட்ட முழு நிலப்பரப்பையும் சொல்லப்போனால் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்கும் திறன் கொண்டதாகப் புதிய பிரமோஸ் ஏவுகணை விளங்குகிறது.
தரை கடல் மற்றும் வான் ஆகிய ஏவுதளங்களில் இருந்து செலுத்தக்கூடிய புதிய பிரமோஸ் இந்தியாவின் வழக்கமான நீண்ட தூர துல்லியமான தாக்குதல் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.
தடுப்பு மற்றும் தாக்குதல் ஆகிய போர் தந்திரங்களுக்கு ஏற்பப் பிரமோஸ் ஏவுகணை கச்சிதமாகச் செயல்படுகிறது என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வேகம் துல்லியம் மற்றும் சக்தி ஆகியவற்றுடன் ஒப்பிடமுடியாத ஆற்றலுடன் பிரமோஸ் இந்திய முப்படைகளின் முதுகெலும்பாக மாறியுள்ளது.

