தமிழ்நாட்டில் அதிமுகவுடனான உறவு சகோதரத்துவ அடிப்படையில் வலுவாக இருப்பதாக தெரிவித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் கூறினார்.
இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் பாஜகவின் பணி மிகக் குறைவானது எனவும் கூட்டணி கட்சிகளே பெருவாரியான பொறுப்புகளை மேற்கொண்டதாகவும் கூறினார். தேசிய ஜனநாயக் கூட்டணியை பொறுத்தவரை மூத்த சகோதரர் போன்று அதிமுக செயல்படுவதாக தெரிவித்த அமித் ஷா, அதிமுகவுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அலையைக் கண்கூட காண முடிவதாக கூறிய அமித் ஷா, வெறுப்பு அரசியலை விதைக்கும் திமுகவை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைந்தால் திமுகவுக்கு எதிராக வலுவான அரசியல் கட்டமைப்பை உருவாக்க முடியும் என எண்ணியதாக கூறிய அமித் ஷா அதேநேரம், தவெக தலைவர் விஜயிடம் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் தெரிவித்தார். தங்களது கூட்டணிக்கு தவெக வந்திருந்தால், தங்களது வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அமித் ஷா கூறினார்.

