“நான் தெய்வபக்தி உள்ளவன்; பொய் பேச மாட்டேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பரப்புரையை தொடங்கிய அவர், ஆலந்தூர் மற்றும் தாம்பரம் தொகுதிகளில் நேற்று பரப்புரை செய்தார்.
குறைவான தொகுதிகள்
தாம்பரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அவர், “ஸ்டாலின் ஆட்சியில் குடிநீர் வழங்கல் துறையில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. அதை அமலாக்கத்துறை கண்டுபிடித்து 3 முறை அறிக்கைகள் அனுப்பியும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின்னர், நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதே போல், மதுரை, திண்டுக்கல் மாநகராட்சிகளிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. பன்றிக்கு வரி போட்டது இந்த திமுக ஆட்சியில் தான்.
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் பெருகிவிட்டது. அவற்றை விற்பவர்கள் அனைவரும் திமுகவினர் தான். அதனால்தான் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெண்களால் வெளியே சுதந்திரமாக நடமாட முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
அம்மா உணவகம்
தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய அம்மா உணவகங்களை மூடி வருகிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் சுடசுட ருசியான உணவுகள் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். நான் தெய்வ பக்தி உள்ளவன். நான் உண்மையை மட்டும்தான் பேசுவேன். ஸ்டாலின் அப்படி அல்ல. தமிழ்நாட்டில் இப்போது வாரிசு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
உதயநிதி மீது தாக்கு
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ன செய்கிறார்? கார் பந்தயம் விடுகிறார். தற்போதைய சூழ்நிலையில் நாட்டிற்கு அதுதான் தேவையா? நாட்டு மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். வேதனைப்படுகிறார்கள். படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்காக இந்த அரசு எதையும் செய்யவில்லை.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா வைக்கிறார்கள். எழுதாத பேனாவை ரூ.82 கோடியில், நடுக்கடலில் வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? கருணாநிதி குடும்ப டிரஸ்ட்டில் ரூ.8,000 கோடி இருக்கிறது. அதிலிருந்து எடுத்து பேனா வைக்க வேண்டியது தானே. யார் வேண்டாம் என்றார்கள். திமுக ஆட்சி கடைசி கட்டத்தில் உயிர் போகும் நிலையில் இருக்கிறது. அந்த ஆட்சிக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு விட்டது. இந்த நேரத்தில் அவர் புதுப்புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாடகம் நடத்துவார்கள்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்
சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் ‘யார் அந்த சார்’ சம்பவம் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி வந்த பின்பு, அந்த சார் யார் என்பதை கண்டுபிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்துவோம். கிருஷ்ணகிரியில் இரண்டு வயது பெண் குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது. விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட கொடூரங்கள் அரங்கேறியுள்ளன.
இப்போது கிட்னி திருட்டு என்று புதிதாக ஒன்று வந்துள்ளது. தமிழ்நாட்டில் வறுமை இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் வறுமை காரணமாக தான் இது போன்ற கிட்னி போன்ற உடல் உறுப்பு திருட்டுகள் நடந்து வருகின்றன. பணத்துக்காக ஏழை மக்கள் தங்கள் உடல் உறுப்புகளை விற்பனை செய்கின்றனர். ஸ்டாலின் ஆட்சியில் இப்படி தான் நிலைமை உள்ளது.
நீங்கள் (மக்கள்) யாராவது திமுகவினர் நடத்தும் மருத்துவமனைகளுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்திருந்தால் உடனடியாக உங்கள் உடலை ஸ்கேன் செய்து பாருங்கள். உங்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

