நியூசிலாந்து தொடருக்குப் பிறகு அணியில் தனக்கு வாய்ப்புகள் கிடைக்காதபோது, தனது கிரிக்கெட் கனவுகள் சிதைந்துவிட்டதாக உணர்ந்தேன் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்திய அணியின் இந்த சாதனை வெற்றிக்கு பெரும் பங்கினை வகித்தவர் சஞ்சு சாம்சன். ஏனெனில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் அவர் மோசமான ஃபார்மில் இருந்ததன் காரணமாக, அணியின் பிளேயிங் லெவனிலும் வாய்ப்பை இழந்தார்.
ஒரு கட்டத்தில் அணியின் டாப் ஆர்டர் சொதப்பவே சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சஞ்சு சாம்சன், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் இறுதிவரை களத்தில் இருந்து 97 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். அதன் பின் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி மற்றும் நியூசிலாந்துடனான இறுதிப் போட்டிகளில் தலா 89 ரன்களை சேர்த்து இந்திய அணி மகுடம் சூட மிக முக்கிய காரணமாகவும் அமைந்தார்.
இந்நிலையில் தனது கம்பேக் குறித்து ஜியோ ஹாட்ஸ்டாரிடம் பேசிய சஞ்சு சாம்சன், “ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின், இதுபோன்ற சிறந்த இன்னிங்ஸை விளையாட வேண்டும் என்று யோசித்து, அதற்கக பயிற்சிகளை செய்து வந்தேன். ஆனால் நியூசிலாந்து தொடருக்குப் பிறகு, என் கனவுகள் சிதைந்துவிட்டதாக நினைத்தேன். அதன்பின் என்னால் சரியாக பேட்டிங் செய்ய முடியாமல் போனது. அப்போது எனக்கு கிடைத்த வாய்ப்புகளை நான் தவறவிட்டேன் என்று புரிந்துகொண்டேன்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஜிம்பாப்வே போட்டிக்கு முன்னாடி நான் கௌதம் கம்பீரிடம் பேசினேன். அபோது அவர், ‘சஞ்சு, தயாரா இரு, அடுத்த போட்டியில் விளையாடப் போகிறாய்’ என்று கூறினார். நான் 100 சதவீதம் தயாராக இருந்தேன். என் மனதிற்குள், ‘அந்த வாய்ப்புக்காக தான் காத்திருக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டேன். ஆனால் நேர்மையாக கூற வேண்டும் எனில், அணியில் உள்ள சக வீரர்களுடன் போட்டியிட எனக்கு விருப்பமில்லை.
நாங்கள் அனைவரும் ஒரே காரணத்திற்காக விளையாடும் போது, என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மட்டுமே எண்ணினேன். மேலும் நியூசிலாந்து தொடரின் போது, ’நான் அணியில் இருக்கேனா? இல்லையா? என்ற கேள்விகள் இருந்தது. மேலும் அணியில் இடத்தை தக்கவைக்க விளையாடும் போது என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. ஆனால் உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைத்த போது நாங்கள் ஒன்றாக போராடி, வெற்றியையும் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன், மொத்தமாக 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் 80 என்ற சராசரியில், 199 ஸ்டிரைக் ரேட்டில், 24 சிக்ஸர்களுடன் 321 ரன்களைக் குவித்திருந்தார். இதன் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் சஞ்சு சாம்சன் வென்றார். இதனையடுத்து சஞ்சு சாம்சனுக்கு திரும்பிய பக்கமெல்லாம் வாழ்த்துகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

