அமைச்சர் சேகர்தபாபு தற்போதும் அமைச்சர் என்ற நினைப்பிலேயே இருப்பதாக தவெக தேர்தல் மேலாண்மை பிரசார பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சங்கராபுரம், குளித்தலை, மதுராந்தகம், வானூர், கே.வி.குப்பம், ஆத்தூர், மேட்டூர், ஶ்ரீரங்கம், கூடலூர், தளி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட தவெக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சி தலைவர் விஜய் நேர்காணல் நடத்தினார். இதைத்தொடர்ந்து, மாற்றுக்கட்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிர்வாகிகளுக்கு அவர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
குறிப்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளராக இருந்த டி.செல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அதேபோல, பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய எம்ஜிஆர் அதிமுகவில் பொதுச்செயலாளராக இருந்த ரஞ்சித் குமார் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர், ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், “40 வருடங்களாக காங்கிரஸில் உள்ள செல்வம், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு, செயற்குழு என காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் அவருடன் சேர்ந்து கட்சியில் இணைந்துள்ளனர்.
காமராஜரின் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோள் எங்கள் தலைவரிடமும் உண்டு. இன்று கட்சியில் இணைந்த காங்கிரஸ் தோழர்களுக்கு வாழ்த்துகள். அனைத்து வேட்பாளர்களையும் தலைவர் நேர்காணல் செய்துவிட்டார். கூடிய விரைவில் வேட்பாளர் அறிவிப்பு வரும்” என்றார்.
பெரம்பூரில் பரப்புரையை ஆரம்பிக்கும் விஜய்
மேலும் பேசிய அவர், “பெரம்பூரில் சுற்றுப்பயணத்தை தொடங்க அனுமதி பெற்று விட்டோம். 28-ஆம் தேதி பெரம்பூரில் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். ஒவ்வொரு தொகுதிகளிலும் ஒவ்வொரு இடத்தில் பாய்ண்ட் டு பாயிண்டாக தலைவர் விஜய் பேச உள்ளார். விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி கொடுத்து விட்டார்கள்.
வில்லிவாக்கத்தில் எனது அலுவலகம் அமைந்துள்ள இடம் கோயில் இடம் எனக்கூறி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடிதம் கொடுக்கிறார்கள். சேகர்பாபு அமைச்சராக இருப்பதாக தற்போதும் நினைத்துக் கொண்டுள்ளார். தேர்தல் தேதி அறிவித்த பிறகு யாரும் இங்கு அமைச்சர்கள் இல்லை.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களாக இருப்பவர்கள், இப்போதும் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்படுவதை தடுத்து நிறுத்துகிறார்கள். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளோம். அதே போன்று டிஜிபி, எஸ்பிக்களை மாற்றக்கோரியும் மனு அளிக்கவுள்ளோம். 234 தொகுதிகளிலும் தவெக தேர்தல் அலுவலங்களை திறக்க, திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் தங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள்” என்றார்.

