பிணம் போல் நடித்த நபரை பாடையில் சுமந்தபடி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நபரால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ள சூழலில், மார்ச் 31, ஏப்ரல் 1, 3 மற்றும் 5ஆம் தேதிகள் விடுமுறை நாட்கள் என்பதால் மார்ச் 30, ஏப்ரல் 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
இதனால், மு.க.ஸ்டாலின், விஜய், சீமான் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் முதல் நாளான இன்றே வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டனர். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேட்பாளர்கள் இன்று ஆர்வமுடன் மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அதே போல, சுயேட்சை வேட்பாளர்களும், சிறு சிறு இயக்கங்களைச் சேர்ந்த வேட்பாளர்களும் வழக்கம் போல் வித்தியாசமான முறையில் தங்களது மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, நெல்லையில் உள்ள மக்களை கவரும் விதம் வேட்பாளர் ஒருவர் தனது ஆதரவாளரை பாடையில் பிணமாக சுமந்தபடி, நூதன முறையில் மனுத் தாக்கல் செய்ய வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அதிசய பாண்டியன், நெல்லை சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதனால், தனது ஆதரவாளர்களுடன் கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிசய பாண்டியன் மனுத் தாக்கல் செய்ய வந்தார்.
முன்னதாக, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதாகவும்’ குற்றஞ்சாட்டி, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாடையுடன் மனுத்தாக்கல் செய்ய வந்தார். அதற்காக, கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தத்தில் தனது ஆதரவாளர் ஒருவரை பிணம் போல் நடிக்க வைத்திருந்தார்.
அதிசய பாண்டியன் ஏற்பாடு செய்த அந்த நபர், பேருந்து நிலையத்திலிருந்த பாடையில் பிணமாக படுத்தபடி நடிக்கத் தொடங்கினார். அவருக்கு மாலை அணிவித்து, இறுதி மரியாதை செய்யும் நிகழ்வும் நடைபெற்றது. குறிப்பாக, அங்கிருந்த பெண்கள் ஒப்பாரி வைத்தபடி இறுதி மரியாதை செய்தனர். பின்னர், அந்த நபரை பாடையில் தூக்குவதைப் போன்று, அனைவரும் தோளில் சுமந்து அரசுக்கு எதிரான கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாதுகாப்புக்கு நின்ற போலீசார், பாடையோடு உள்ளே செல்ல அனுமதி இல்லை எனக் கூறி, அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, வேட்பாளர் அதிசய பாண்டியன் உட்பட 5 பேர் மட்டும் மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனவே, மற்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நெல்லையில் மனுத் தாக்கல் செய்ய பாடையுடன் வந்த நபரால், பரபரப்பு ஏற்பட்டது.

