கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்றும், தமிழ்நாட்டில் 210 தொகுதிகளில் வெற்றிப் பெறுவோம் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியான நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை மாவட்டத்தில் போட்டியிடும் 8 அதிமுக வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை மாவட்டம் முழுமைக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை எப்பொழுதுமே அதிமுக கோட்டை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கொடுத்திருக்கிறோம். செய்ய முடியாத திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். அத்திக்கடவு அவனாசி திட்டம், விமான நிலைய விரிவாக்கம், மேம்பாலம் என பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்” என தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி ஆட்சி உறுதி
”அவிநாசி தொகுதியை சேர்த்து 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதுமட்டுமின்றி, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழ்நாடு முழுவதும் 210 தொகுதிகளில் அதிமுக வெல்லும். திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. அதிமுக ஆட்சி வந்ததும் மீண்டும் வளர்ச்சி கொண்டு வரப்படும். மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை கொண்டு வருவோம்” என உறுதியளித்தார்.
”திமுக ஆட்சியில் குடிநீர் வரி, சொத்து வரி உட்பட அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. குப்பைக்கு கூட வரி போடுகின்றனர். மக்கள் தெளிவாக இருக்கின்றனர். களத்தில் நேர்மையாக மக்களைச் சந்திப்போம், வாக்குகளை சேகரிப்போம், வெற்றி பெறுவோம்” எனக் கூறினார்.
தொடர்ந்து கூட்டணி கட்சிகளை பற்றி பேசிய அவர், “ அதிமுக பெரிய கட்சி. கூட்டணிக் கட்சிகளிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கலாம். சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். அவை காலப்போக்கில் சரியாகிவிடும். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழகம் மீண்டும் வளர்ச்சி பெற அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள்” என எஸ்.பி. வேலுமணி பேசினார்.

