22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. இது, தங்கம் விலை குறைவுக்கு காரணமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயானது டாலரில் விற்கப்படுவதால், டாலர் மதிப்பு கூடி வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கச்சா எண்ணெயின் விலை மாற்றத்திற்கு ஏற்ப, தங்கம் விலையும் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முறை கூட மாற்றம் கண்டுவருகிறது.
போர் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், போர் நிறுத்தம் குறித்து பேச தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியதிலிருந்து தங்கம் விலை சற்று ஏற தொடங்கியது. குறிப்பாக, 5 நாட்கள் வரை ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்ததிலிருந்து தங்கம் விலை ஏறியது. மேலும், 10 நாட்களுக்கு தாக்குதலை தள்ளி வைப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தொடர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.
தங்கம் விலை
ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை (மார்ச் 28) கிராமுக்கு ரூ. 230 அதிகரித்து ரூ. 13,660க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 60 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 1,840 அதிகரித்து ரூ. 1,09,280க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,08,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை சனிக்கிழமை (மார்ச் 28) கிராமுக்கு ரூ. 5 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 250க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று வெள்ளி ஒரு கிலோ ரூ. 2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

