புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் நிலக்கரி இறக்குமதி செய்வதை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக சீமான், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட தேச விரோத வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்காலில் துறைமுகம் உள்ளது. இதனை மார்க் என்ற தனியார் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் இருந்து வரும் துகள்கள் நாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச் சூழலை பாதிப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், நிலக்கரியில் இருந்து வரும் துகள்கள் பரவுவதை கண்டித்து கடந்த 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து சீமான், நாகப்பட்டினம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன் உள்ளிட்டோர் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சில மாதங்களுக்கு முன்பு காவல் துறை தாக்கல் செய்தது.
இதையடுத்து, தான் முன்னாள் எம்.எல்.ஏ என்பதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு அரசிடம் முறையான அனுமதியை காவல் துறை பெறவில்லை என்று கூறி, இந்திய தேசிய லீக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் ஆஜராகி குற்றப்பத்திரிகையையும், வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

