பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு-
பெட்ரோல்,டீசலுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை ₹10 அளவுக்கு குறைத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருப்பது காலத்திற்கேற்ற, வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
இரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை பாதித்து, கச்சா எண்ணெய் விலையை உயர்ந்துள்ள இந்த சூழலில், மத்திய அரசின் இந்த தீர்க்கமான முடிவு இந்திய மக்களை சர்வதேச பொருளாதார சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும் உறுதியை வெளிப்படுத்துகிறது.
பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை ₹13 இலிருந்து ₹3 ஆக குறைத்ததும், டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை முழுமையாக நீக்கியதும், மக்களிடம் சுமையை ஏற்றாமல், அதை தாமே ஏற்கும் மத்திய அரசின் மனப்பாங்கை காட்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் உலக அரசியல் பதற்றங்களையொட்டி, இந்திய பொருளாதாரத்தையும் பொதுமக்களையும் பாதுகாக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிமுக ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில், அக்கோரிக்கைக்கு இணங்க, பொருளாதார சமநிலையையும், மக்கள் நலனையும் கருத்திற்கொண்டு மத்திய அரசு எடுத்துள்ள இந்த பொறுப்பான நடவடிக்கையினை அஇஅதிமுக சார்பில் நான் மனதார வரவேற்கிறேன்.

