ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் இந்திய கப்பல்களுக்கு எந்த தடையும் இல்லை என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரால் மேற்காசிய நாடுகளும், மத்திய கிழக்கு நாடுகளும் அவெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் சுமார் 20 விழுக்காடு கடல் வழி வர்த்தகத்திற்கு பங்களிக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த சூழலில், நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு, அந்த வழித்தடம் எப்போதும் திறந்திருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, “நாங்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக நட்பு நாடுகளின் கப்பல்கள் செல்வதை அனுமதித்துள்ளோம். இதில் சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்த பதிவை அடுத்து, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அதிக நாட்கள் ஹார்முஸ் நீரிணையை மூடிவைப்பது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்கள் போன்றவற்றின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். இது நேரடியாக மனித சமூகத்தை தாக்கும். எனவே, போரை முடிவுக்கு கொண்டுவருவது தான் ஒரே வழி” என தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை மூடல், அண்டை நாடுகளின் எரிசக்தி தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் என கடந்த நாட்களில் நடைபெற்ற சம்பவங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

