தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி, உள்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மனு அளித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் வரும் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அடுத்த நாளே (ஏப்ரல் 7) நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு ஏப்ரல் 9ஆம் தேதி கடைசி நாளாகும். இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அதே நாளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிமுக – பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிகளை உறுதி செய்து பரப்புரையை துவங்கி விட்டது. அதேபோல், திமுக கூட்டணியிலும் கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறது. இந்த முறை தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தல் களம் காண்கிற நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் வேட்பாளர் நேர்காணல் செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்தே தேர்தல் பரப்புரையை தொடங்கிய தவெக, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திற்கு பிறகு, பரப்புரையை தற்காலிகமாக நிறுத்தியது. பிறகு மீண்டும் பரப்புரையை தொடங்கிய நிலையில், அரசு அனுமதி கொடுக்க மறுப்பதாகவும், மற்ற கட்சிகளை விட தங்கள் கட்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் பரப்புரைக்கான அனுமதி அளிப்பது இப்போது தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பரப்புரையை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் ஆகியோரை சந்தித்து மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டுமென மனு அளித்ததாக தெரிவித்தார். மேலும் பரப்புரை தேதி இன்னும் முடிவாகவில்லை எனவும், பரப்புரை விதிமுறைகள் தொடர்பாக பேசப்பட்டதாகவும் கூறினார்.

