தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரானது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது. அந்தவகையில், ஜூன் 12ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஜூன் 28ஆம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரில் 12 அணிகள் பங்கேற்கும் நிலையில், அணிகள் தலா இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் மோதவுள்ளன.
இதன் காரணமாக தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதிலிருந்தே தங்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய மகளிர் அணியும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தற்சமயம் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரானது ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 27ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இதில் முதலிரண்டு போட்டிகள் டர்பனிலும், 3 மற்றும் 4ஆவது போட்டிகள் ஜொஹன்னஸ்பர்க்கிலும், கடைசி போட்டி பெனோனியிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். அதேசமயம் அறிமுக வீராங்கனைகள் அனுஷ்கா சர்மா, காஷ்வீ கௌதம் ஆகியோருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அனுஷ்கா சர்மாவுக்கு இந்த வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் காஷ்வீ கௌதமும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதவிர ஆஸ்திரேலிய தொடரில் அணியில் இடம் பிடிக்க தவறிய உமா சேத்ரியும் மீண்டும் டி20 அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய வைஷ்ணவி சர்மா, ஸ்நே ரானா, ஜி கமலினி மற்றும் அமஞ்சோத் கவுர் ஆகியோருக்கு இந்த தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்திய மகளிர் டி20 அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ஸ்ரேயங்கா பாட்டீல், காஷ்வீ கௌதம், பார்தி ஃபுல்மாலி, உமா சேத்ரி, அன்ஷ்கா ஷர்மா.

