வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடும் பட்சத்தில் அவரே சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்று பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மறுபக்கம் ஐபிஎல் அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் காத்திருக்கின்றன. இந்த நிலையில், வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடரில், தோனி விளையாடும் பட்சத்தில் அவரே அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்று பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜியோ-ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய ஆகாஷ் சோப்ரா, “இந்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுகிறார் என்றால், அவரே கேப்டனாக இருக்க வேண்டும் என்பதில் நான தெளிவாக உள்ளேன். அவர் களத்தில் இருந்து 20 ஓவர்களும் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்றால், ஆட்டம் முழுவதும் அவர் அங்கேயேதான் இருக்கப் போகிறார்.
மேலும் போட்டியின் போது களத்தில் இருக்கும் 22 வீரர்களில், மகேந்திர சிங் தோனியை விடச் சிறந்த ஒரு கேப்டனை எனக்குக் காட்டுங்கள். அப்படி யாராவது இருந்தால் நான் என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன். ஆனால், அவர் அங்கேயே இருக்கும்போது, அவர் ஏன் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படக்கூடாது?
இதுதவிர இந்த சீசனில் சிஎஸ்கே அணி தோனியிடம் இருந்து மிகப்பெரிய பங்களிப்பை எதிர்பார்க்கிறது என்றால், அவரே கேப்டனாக செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது ஆகாஷ் சோப்ரா இதே கருத்தை முன்வைத்திருந்தார்.
தற்போதும் அவர் தனது கருத்தில் நிலையாக உள்ளார். ஆனால் சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரையில் இது தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என்ற கருத்துகள் உள்ளன. மேலும் தோனிக்குப் பிறகு அணியை வழிநடத்தக்கூடிய வீரரை அவர் இருக்கும் போதே உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே இந்த மாற்றத்தை செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
தற்சமயம் 43 வயதை எட்டியுள்ள மகேந்திர சிங் தோனி, இதுவரை 278 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5,439 ரன்களை குவித்துள்ளார். மேற்கொண்டு இவர் 226 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளதுடன், 133 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளார். இதுதவிர தோனி தலைமையின் கீழ் சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

