மின் கசிவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுமார் 5 தளங்களில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இதுபோன்ற சூழலில், இன்று (மார்ச் 24) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நான்காவது தளத்தில், அறுவைச் சிகிச்சை அரங்கம் அருகே அமைந்திருந்த சுவிட்ச் போர்டில் மின்கசிவு ஏற்பட்டு புகை வரத் தொடங்கியுள்ளது. அதனைக் கண்ட அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
அந்த சத்தம் கேட்டு வந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை முழுவதுமாக துண்டித்துள்ளனர். இந்த துரித நடவடிக்கை காரணமாக, மருத்துவமனையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருந்தாலும், மின்கசிவு ஏற்பட்டு பகுதியில் சிறிது நேரம் புகை மூட்டம் நிலவியது.
அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு மின் விபத்து ஏற்பட்ட பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் தடுத்தனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தீயணைப்பு அதிகாரி கருணாகரன், “தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் உள்ள நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விரைந்து வந்து பார்த்தபோது, அறுவைச் சிகிச்சை அரங்கத்திற்கு அருகே தீ விபத்து ஏற்பட்டு, மருத்துவமனை ஊழியர்களால் அணைக்கப்பட்டிருந்தது.
சிறிதளவு புகை மட்டும் வந்து கொண்டிருந்தது. அதுவும் துரிதமாக அணைக்கப்பட்டது. இதுபோன்ற அவசரக் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதனை நினைவில் கொண்டு துரிதமாக, தீயை அணைத்துள்ளனர். இதனால், உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது” என்றார்.
இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

