காதல் திருமணம் செய்து கணவருடன் வசித்து வந்த பெண்ணை, அவரின் உறவினர்கள் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட அந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிஷா. இவர்கள் இருவருக்குமிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு ஸ்ரீநிஷாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கடந்த 18 ஆம் தேதி முத்து – ஸ்ரீநிஷா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட கையோடு, பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட குன்னம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து பாதுகாப்பு கோரினர். இதனைத் தொடர்ந்து, போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து, இருவரும் 18 வயது நிரம்பியவர்கள் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ உரிமை உண்டு என்பதை எடுத்துக்கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீநிஷாவை முத்துவின் குடும்பத்தினர் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அரியலூர் மாவட்டம் கல்லக்குடியில் உள்ள முத்துவின் உறவினரான முருகன் என்பவரது வீட்டிற்கு விருந்துக்காக முத்து – ஸ்ரீநிஷா தம்பதி சென்றுள்ளனர். விருந்து முடிந்து இருவரும் அந்தூர் கிராமத்திற்குச் செல்வதற்காக அரியலூர் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.
இவர்கள் வருவது குறித்த தகவலறிந்த ஸ்ரீநிஷாவின் உறவினர்கள், அரியலூர் பேருந்து நிலையத்துக்கு காரில் சென்று காத்திருந்தனர். காதல் ஜோடி பேருந்தில் ஏற முயன்ற போது அவர்களை பிரித்து ஸ்ரீநிஷாவை தங்களுடன் காரில் ஏற்றிச் செல்ல முயன்றுள்ளனர். இதற்கு முத்து எதிர்ப்பு தெரிவிக்கவே ஸ்ரீநிஷாவை வலுகட்டாயமாக காரில் ஏற்றியுள்ளனர். அவர்களுடன் காரில் ஏறிக் கொண்ட முத்து, கார் கதவுகளை மூடாமல் திறந்து பிடித்தபடியே சென்றுள்ளார்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அரியலூர் நகர வீதியில் கதவு மூடப்படாமல் கார் ஒன்று அங்குமிங்கும் சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் முத்து காருக்குள் இருந்தபடியே கூச்சலிட்டதால் வாகன ஓட்டிகளும், காவல்துறையினரும் இணைந்து காரை மடக்கிப் பிடித்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரித்து கொண்டிருந்த போது, தனது மனைவியை பிரித்து அழைத்துச் செல்வதாக முத்து கத்திக் கொண்டே இருந்தார். அந்த நேரத்தில் ஸ்ரீநிஷாவை அவரது உறவினர்கள் ஆட்டோவில் ஏற்றி கூட்டிச் செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் காரை பறிமுதல் செய்ததோடு, ஸ்ரீநிஷாவின் உறவினர்களையும் அரியலூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் கடைவீதி பகுதியில் காதல் திருமணம் புரிந்த பெண்ணை, அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

