ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இதில் மார்ச் 30ஆம் தேதி கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
குறிப்பாக கடந்த சில சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை ஏலத்திற்கு முன்னரே சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்தது. மேலும் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டிரேடிங் செய்திருந்தது.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் தங்களின் முதல் லீக் ஆட்டத்திலேயே நேருக்கு நேர் மோத இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூலம் அறிமுகமான ரியான் பராக், முதல் சில சீசன்களில் சோபிக்க தவறினாலும் சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்குள்ளும் நுழைந்தார். மேலும் கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸின் தற்காலிக கேப்டனாகவும் அவர் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தான் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு வெளியேறியதை அடுத்து அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த சரியான நபர் ரியான் பராக் தான் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய குமார் சங்கக்காரா, “இப்போது சஞ்சு சாம்சன் எங்கள் அணியின் ஒரு பகுதியாக இல்லை என்பதால், அணிக்கு ஒரு புதிய தலைமை தேவைப்பட்டது. அந்தப் பொறுப்பிற்கு ரியான் பராக் சிறந்த தேர்வாக உருவெடுத்துள்ளார். அணிக்கு சரியான தலைவரைத் தேர்ந்தெடுப்பது எளிதான முடிவாக இருக்கவில்லை.
இருப்பினும், ஒரு முழுமையான பரிசீலனைக்குப் பிறகு, ஒரு இளம் வீரரை கேப்டனாக நியமிக்க ஒருமனதாக முடிவு செய்தோம். அதன் அடிப்படையிலேயே பராக் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரிடம் தலைமைத்துவப் பண்புகள் உள்ளன. அவரால் அணியை முன்னோக்கி அழைத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறோம்” என்றார்.
மேலும் சஞ்சு சாம்சனின் இடத்தை உங்களால் நிரப்ப முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரியான் பராக், “சஞ்சு சாம்சனின் இடத்தைப் பூர்த்தி செய்வது எளிதான காரியம் அல்ல. ஏனெனில் அவருடைய ஆட்டம் தனித்துவமானது, அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. இது ‘விராட் கோலிக்கு மாற்று யார்?’ என்று கேட்பது போன்றது. அதனால் சஞ்சுவின் இடத்தை நிரப்புவது சாத்தியமற்றது” என்று கூறினார்.
டி20 உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: கேப்டன் பதவியிலிருந்து விலகினார் பால் ஸ்டிர்லிங்
ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ்: காலிறுதியில் இந்திய வீராங்கனைகள்; ஏமாற்றத்துடன் வெளியேறிய ஆயுஷ் ஷெட்டி
இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரியான் பராக்(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல், சந்தீப் ஷர்மா, நந்த்ரே பர்கர், ஷிம்ரான் ஹெட்மையர், குவேனா மபாகா, ஷுபம் துபே, பிரிஜேஷ் சர்மா, ஆடம் மில்னே, யுத்வீர் சிங் சரக், ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், டொனவன் ஃபெரீரா, சாம் கரண், ரவி சிங், சுஷாந்த் மிஸ்ரா, அமன் ராவ் பெராலா, விக்னேஷ் புதூர், யாஷ் ராஜ் புஞ்சா, குல்தீப் சென்

