ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஃபாஸ்டர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 19ஆவது சீசன் இந்தாண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதனையடுத்து தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தற்போதிலிருந்தே தங்களின் பயிற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், 6ஆவது கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளனர். இதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே சென்னை வந்தடைந்ததுடன், தங்களின் பயிற்சிகளையும் தொடங்கியுள்ளனர்.
இதில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்தாண்டு சிஎஸ்கே அணியில் இணைந்துள்ள ராமகிருஷ்ண கோஷ், ஊர்வில் படேல், கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர், கலீல் அஹ்மத், முகேஷ் சௌத்ரி உள்ளிட்டோர் சிஎஸ்கே அகாடமியில் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்கள் குழுவிலும் அணி நிர்வாகம் சில மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன் ஒருபகுதியாக சிஎஸ்கே அணியின் ஃபில்டிங் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஃபாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய எக்ஸ் பதிவிலும் இதனை உறுதி செய்துள்ளது. முன்னதாக சிஎஸ்கே ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா தான் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் ஜேம்ஸ் ஃபாஸ்டர் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை விக்கெட் கீப்பர் பேட்டராக ஜேம்ஸ் ஃபாஸ்டர் விளையாடியுள்ளார். இதில் அவர் 7 டெஸ்ட் போட்டிகளிலும், 11 ஒருநாள் போட்டிகளிலும், 5 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதுதவிர அவர் கவுண்டி கிரிக்கெட் தொடரில் எசக்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
தனது ஓய்வுக்கு பிறகு அவர், உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. இதுபோன்ற சூழ்நிலையில் ஃபாஸ்டர் சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), மகேந்திர சிங் தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் பிரேவிஸ், அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஜேமி ஓவர்டன், முகேஷ் சௌத்ரி, நாதன் எல்லிஸ், கலீல் அஹ்மத், நூர் அஹ்மது, ராமகிருஷ்ண கோஷ், ஷிவம் துபே, ஸ்ரேயாஸ் கோபால், ஆயுஷ் மாத்ரே, ஊர்வில் படேல், கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர், அகீல் ஹொசைன், மேட் ஹென்றி, மேத்யூ ஷார்ட், சர்ஃப்ராஸ் கான், அமான் கான், ராகுல் சஹர், ஜக்காரி ஃபால்க்ஸ்.

