காயம் காரணமாக பாட் கம்மின்ஸ் அவதிப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தற்காலிக கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 19ஆவது சீசன் இந்தாண்டு மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தங்களின் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லீக்கின் முதல் போட்டி என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் தொடருக்கு முன்னதாகவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பின்னடைவை சந்தித்துள்ளது. ஏனெனில் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், தொடரின் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் காயத்தை சந்தித்த பாட் கம்மின்ஸ், அதன்பின் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். பின்னர் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்த கம்மின்ஸ், அத்தொடரில் மூன்றாவது ஆட்டத்தில் மட்டுமே விளையாடிய நிலையில் மீண்டும் காயத்தை சந்தித்து தொடரில் இருந்தும் விலகினார். மேலும் அவர் தொடர் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலும் இடம்பெறவில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதும் அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைவில்லை என்பதால், தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வியும் எழுத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தான், பாட் கம்மின்ஸுக்கு பதிலாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சன்ரைசர்ஸ் அணி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் ஓரிரு தினங்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சமீப காலமாக ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இஷான் கிஷன், நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்த இஷான் கிஷன், சிறப்பாக விளையாடியதுடன் அணி சாம்பியன் பட்டம் வெல்லவும் முக்கிய காரணமாக அமைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுவரை ஐபிஎல் தொடரில் 119 போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன் ஒரு சதம், 17 அரைசதங்கள் என 2,998 ரன்களை சேர்த்துள்ளார். மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒரு சதம் மற்றும் 10 அரைசதங்களுடன் 1,328 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

