உதகை அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ஓம் பிரகாஷ். இவருக்கு வயது 45. அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவர், தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை, இதனால் மனஅழுத்தம் ஏற்படுவதாக மருத்துவர் ஓம் பிரகாஷிடம் கூறியுள்ளார். இந்த தருணத்தைப் பயன்படுத்தி, மாணவிக்கு உதவுவது போன்று அவரின் மொபைல் எண்ணை மருத்துவர் ஓம் பிரகாஷ் வாங்கியுள்ளார்.
தொடர்ந்து, மாணவிக்கு வாட்ஸ்ஆப் மூலம் மெசேஜ் செய்து, ஆசை வார்த்தைகளை கூறி நம்ப வைத்துள்ளார். மன அழுத்ததை போக்கி படிக்க உதவியாக இருக்கும் என எண்ணிய மாணவிக்கு கவுன்சலிங் தருவதாகவும், அதற்கு மேலும் மூன்று மருத்துவர்கள் உதகையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளதாகவும் மாணவியிடம் கூறியுள்ளார். அதன்படி, மாணவியை அழைத்துக் கொண்டு தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
அங்கு தனியாக அறை எடுத்து, மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவி அறையிலிருந்து வெளியேறி, அவரின் பெற்றோருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் உதகை மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் பேரில், மருத்துவர் ஓம் பிரகாஷை காவல் துறையினர் அழைத்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் மருத்துவ மாணவியின் புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் ஓம் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வந்த மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி நம்ப வைத்து, பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் உதகை அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

