தமிழ்நாடு காவல்துறையில் முதல் பெண் உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி ஐபிஎஸ்-யை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி ஆக இருந்த பாலநாகதேவி, உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை மிக முக்கிய பிரிவாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாடு காவல்துறையில் முதல் பெண் உளவுத்துறை டிஜிபி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முக்கிய பொறுப்பை பாலநாகதேவி ஏற்கவுள்ளார்.
அதைத் தொடர்ந்து, பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாகப் பணியாற்றி வரும் சந்தோஷ் குமாருக்கு கூடுதல் பொறுப்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையில் ஐஜியாகப் பணியாற்றி வந்த ரூபேஷ் குமார் மீனாவுக்கு கூடுதல் பொறுப்பாக குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் ஏடிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஏற்கெனவே 100- க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர் என்பது நினைவுக்கூறத்தக்கது. சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

