ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக மேற்காசிய நாடுகளில் நெருக்கடி உருவாகத் தொடங்கியிருப்பதால், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் நாடுகளிடையே மோதல் உருவானது. இதில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து, ஈரானும் பதில் தாக்குதலை தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக இந்த நாடுகளுக்கிடையே கடுமையான மோதல் நீடித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதே போல், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் ராணுவ தளங்கள் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் வாழும் பகுதிகளில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த மோதலில் ஈரான் தனது எல்லைக்குட்பட்ட, பாரசீக வளைகுடாவிற்கும், ஓமன் வளைகுடாவிற்கும் இடையிலான ஒரு குறுகிய நீர்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதற்கிடையே ஈரானின் புதிய உச்ச தலைவராக அயோதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் தற்போது ஈரான் தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது.
இந்த தாக்குதலால் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளுக்காக வளைகுடா நாடுகளை நம்பியிருந்த மேற்காசிய நாடுகள் கடும் நெருக்கடியை சந்திக்க தொடங்கி இருக்கின்றன. முக்கிய நீர்வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் உலகின் 20% எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட வர்த்தகங்கள் நடைபெறுகின்றன.
தற்போது இந்த பாதை அடைக்கப்பட்டுள்ளதால் உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்து வருகின்றன. மேற்காசிய நெருக்கடி தொடங்கியதிலிருந்தே ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சியுடன், இந்திய அரசு தொடர்பில் இருந்து வருகிறது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய முதல் நாளான பிப்ரவரி 28 அன்று, காமேனி கொல்லப்பட்ட உடனேயே அராக்ச்சியை, ஜெய்சங்கர் தொடர்புகொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து போர் வலுவடைய தொடங்கியதும் மார்ச் 5ஆம் தேதியன்றும் இருவரும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் எண்ணெய் மற்றும் திரவ எரிவாயு தட்டுப்பாடு தொடங்கியுள்ள நிலையில், நேற்று மாலை ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்ச்சியுடன் சமீபத்திய பிரச்சினைகள் குறித்து உரையாடியதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவருடைய எக்ஸ் பதிவில், “தற்போது நடந்து வரும் மோதல் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்ச்சியுடன் விரிவான உரையாடல் மேற்கொண்டேன். இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி பதவியேற்ற பிறகு, இந்தியாவின் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும். அதே போல், உலக எரிசக்தி சந்தையில் மேற்காசிய நெருக்கடி ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் வதேபுலுடனும், தென் கொரியா வெளியுறவுத் துறை அமைச்சர் சோ ஹியூனுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வதேபுலுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், “மேற்காசியாவில் நடைபெற்று வருகிற மோதல்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, “சோ ஹியூனுடன் மேற்காசியாவின் நிலைமை, எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து விவாதித்தோம். மேலும் மத்திய கிழக்கின் நிலைமை குறித்தும், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதித்தோம்” என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை மூலம், இந்தியா – தென் கொரியா இடையேயான உறவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

