16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் 2026-2027- ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டை கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது சில முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, “ஐஐஎஸ்சியில் (IISC) கீழ் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பப் பூங்கா, இஸ்ரோ மற்றும் கியோனிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக் கண்டுபிடிப்பு மண்டலம் மற்றும் பெங்களூரு ரோபோட்டிக்ஸ் வளாகம் அமைக்கப்படும். தற்போது செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.
இதற்கென மாநில சட்டப்பேரவையில் முறையான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும். குழந்தைகளின் எதிர்மறையான தாக்கத்தைத் தடுக்கவும், குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று கர்நாடகா நிதிநிலையில் அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டு விவசாயிகளைக் கவலையடையச் செய்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்று பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்தியாவில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர்களின் வயது அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இந்திய சமூக வலைத்தள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் மூலம் சமூக வலைத்தளங்களை மிகவும் பாதுகாப்புடன் குழந்தைகள் கையாளும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதித்திருந்தது. உலகில் குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை செய்த முதல் நாடு ஆஸ்திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.
