பணிச்சுமை காரணமாக ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி மார்ச் 6 ஆம் தேதி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி, இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ரேணுகா சிங்கின் பணிச்சுமை காரணமாக இப்போட்டியில் இருந்து அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். தனது பணிச்சுமையை நிர்வகிக்க, ரேணுகா இந்த ஓய்வை எடுத்துள்ளதால், இந்த டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் அவர் இடம்பெறவில்லை.
இந்த காலகட்டத்தில் பிசிசிஐ மருத்துவக் குழு ரேணுகாவின் உடற்தகுதி முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும். அதேசமயம் ரேணுகா சிங் தாக்கூருக்கு பதிலாக, மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் காஷ்வீ கௌதம் இந்திய மகளிர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று அறிவித்துள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காஷ்வீ கௌதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரேணுகா சிங் போன்ற அணுபவ வேகப்பந்து வீச்சாளர் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.

