தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மதுரை மாவட்டம், மண்டேலா நகரில் நடைபெற்ற என்.டி.ஏ. பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில், என்.டி.ஏ. கூட்டணி கட்சித் தலைவர்களான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “உலக நாடுகளே மெச்சுகின்ற அளவுக்கு சிறப்பான நல்லதொரு ஆட்சியை இந்தியாவுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி” எனத் தனது பேச்சைத் தொடங்கினார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; “இந்தியாவே தமிழ்நாட்டை உற்றுநோக்கிவருகிறது. யார் ஆள வேண்டும், யார் ஆளக்கூடாது என்பதற்கான சட்டமன்றத் தேர்தல் வருகிறது. நம் கூட்டணி 210 இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எதுவும் தரவதில்லை என அவதூறு பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஆனால், இன்றும் கூட 4,400 கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களை கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அதிமுக ஆட்சியில் ஒரே சமயத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை கொண்டுவந்தோம். திமுக ஆட்சியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவர முடிந்ததா?
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்தபோது தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டார். அதுவும் கொடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்துவருகிறது. ஆனால், அதனையும் திமுக அரசு முடக்கப் பார்த்தது” எனத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களைப் பற்றி பேசினார்.

