வடசென்னையில் விஜய் போட்டியிட வேண்டும் என, தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மற்றும் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் களப்பணிகள் குறித்தும், 2026ல் ஆட்சியை பிடிப்பதை இலக்காக கொண்டு அடிமட்ட அளவில் கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சமாக வடசென்னையில் விஜய் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ”நம்முடைய முதல் கூட்டத்தை சென்னை பெரம்பூரில் நடத்த முடிவு செய்தோம். அதற்கு காரணம் உள்ளது. வடசென்னையை பற்றிய தவறான பிம்பத்தை திமுக உருவாக்கி வைத்துள்ளது. அதை முறியடிக்க வேண்டியது அவசியம். அதற்காக தான் இந்த தொடக்கம். இதே பகுதியில் நம் ஆட்களை அடித்தார்கள். அதனால் அவர்கள் இடத்திற்கே போய் அவர்களை அடிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பெரம்பூரில் குறுகிய காலத்திலேயே 40 ஆயிரம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கான மிகப்பெரிய சான்று.
மேலும் பேசிய அவர், “நாம் அறவழியில் அரசியல் செய்கிறோம். ஆனால் அவர்கள் பாணியில் நமக்கும் செய்ய தெரியும். சென்னை திமுகவின் கோட்டை என்று சொல்வார்கள். அதனால் தான் அதிமுகவே போட்டியிட தயங்கும். அந்த கோட்டை உடையும். வடசென்னையில் இருந்தே மாற்றத்தின் பயணம் தொடங்கியுள்ளது. எனக்கு ஒரு கோரிக்கை உள்ளது. வடசென்னை பகுதியான பெரம்பூர் தொகுதியில் நமது தலைவர் (விஜய்) நிற்க வேண்டும்.ெ டெல்லியிடமே எந்த சமரசமும் இல்லை. எப்படி திமுகவிடம் சமரசம் செய்வோம்? எம்ஜிஆர் எப்படி திமுகவை எதிர்த்து அழித்தாரோ? அதேபோல் தலைவரும் செய்வார்,” என்றார்.
மேலும் பேசிய அவர், “தேமுதிகவை எதற்காக ஆரம்பித்தார்கள்? திமுகவை தூக்கி எறிய. ஆனால் இப்போது எங்கு சென்று சேர்ந்துள்ளார்கள்? வடிவேலு சொன்னதை கேட்டு சிரித்தார் ஸ்டாலின். எனவே கேப்டன் விஜயகாந்த் ஆத்மா சாந்தி அடையாது. திருமா மீது விமர்சனம் வைக்க முடியாது. விஜய் முதல்வரான உடனே மே மாதத்தில் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆகும். 234 தொகுதிகளிலும் தலைவர் விஜய் தான் வேட்பாளர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் நாம் வெல்ல வேண்டும்” என்று ஆதவ் அர்ஜுனா பேசினார்.
இதன் பின்னர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”அனைத்து தொகுதிகளிலும் நம்முடைய வெற்றிக் கழகத்தின் தளபதிதான் (விஜய்) போட்டியிடுவதாக அர்த்தம். 234 தொகுதிகளிலும் அவர் யாரை விரல் காட்டுகிறாரோ அவர்தான் சட்டமன்ற உறுப்பினர் என்கிற வரலாறு தமிழ்நாட்டில் மிக விரைவில் உருவாகும். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாத நிலையை மக்கள் சக்தி உருவாக்கி காட்டும்” என்று கூறினார்.

