16 வயது சிறுமியுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் குடியேறி நூதன முறையில் நகைகளை திருடி வந்த நபரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கருடாழ்வார் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் புனிதா ஸ்ரீ (22). இவர்களது வீட்டின் கீழ் தளத்தில் ஜெகதீஷ் என்பவர் மனைவி மற்றும் மகளுடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் ஜெகதீஷ் தான் மருத்துவராக பணியாற்றுவதாக புனிதா ஸ்ரீ குடும்பத்தாரிடம் தெரிவித்து நட்புடன் பழகி வந்தார். இந்த சூழலில், ஜெகதீஷ் புனிதா ஸ்ரீயிடம், ”சென்னையில் தனக்கு தெரிந்த சினிமா பிரபலங்கள் நிறைய பேர் உள்ளனர். எனவே, நீ போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை என்னிடம் கொடுத்தால் அதனை வைத்து உனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன்” என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதனை நம்பிய புனிதா ஸ்ரீ, இது குறித்து அவரது வீட்டில் தெரிவித்த போது அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து புனிதா ஸ்ரீ, அவரது சகோதரர், ஜெகதீஷ் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோர் கடந்த 16ஆம் தேதி காரில் சென்னைக்கு சென்று உள்ளனர். அப்போது ஜெகதீஷ், புனிதா ஸ்ரீ மற்றும் அவரது தம்பியை சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் போட்டோ ஷுட் எடுக்க புதிய ஆடைகளை வாங்கி மாற்றிக்கொள்ளும்படி புனிதாவிடம் ஜெகதீஷ் கூறியுள்ளார்.
மேலும், புனிதா ஸ்ரீ 16 சவரன் தங்க சங்கிலி, கம்மல், வளையல் உள்ளிட்டவைகளை அணிந்திருந்ததால், ” அதனை கழட்டி பையில் வைத்து விட்டு செல், இல்லையென்றால் உடைமாற்றும் பொழுது தொலைந்து விடும்” என ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி புனிதா ஸ்ரீ தனது 16 சவரன் தங்க நகையை கழற்றி அவரது பையில் வைத்து ஜெகதீஷ் இடம் ஒப்படைத்துவிட்டு சென்று உள்ளார். இதையடுத்து புனிதா ஸ்ரீயும், அவரது சகோதரரும் புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டு வெளியே வந்து பார்த்த போது, ஜெகதீஷ் தங்க நகைகளுடன் மாயமானது தெரிய வந்தது. மேலும் அவருடன் வந்த 16 வயது சிறுமியும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த புனிதா ஸ்ரீ மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இது குறித்து சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் அண்ணா சாலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராயப்பேட்டை வணிக வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் நகைப் பையுடன் மாயமான ஜெகதீஷ் மற்றும் சிறுமியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஜெகதீஷ் கோயம்புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவரை அண்ணா சாலை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஜெகதீஷ் (52) கோவையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவரும், சிறுமியும் சேர்ந்து இதே போல சென்னை சாஸ்திரி நகர், வேளச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் வாடகைக்கு குடியேறி, அங்கு தங்கி இருக்கும் குடும்பத்துடன் நன்றாக பழகி நம்பிக்கை ஏற்படுத்தி, தங்க நகைகள் மற்றும் செல்போன்களை ஏமாற்றி திருடியுள்ளது தெரிய வந்தது.
மேலும், இதுபோன்று திருடும் நகை, செல்போன்களை விற்று அதில் வரும் பணத்தை வைத்து பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.
மேலும் புனிதா ஸ்ரீ இடமிருந்து திருடப்பட்ட 16 சவரன் கொண்ட ஆரம், சங்கிலி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து ஜெகதீஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அதே போல, 16 வயது சிறுமியை சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர் படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
மேலும், சென்னையில் இதேபோன்று பலரிடம் ஜெகதீஷ் நூதன முறையில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி இருக்கலாம் என்பதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அண்ணா சாலை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல, ஜெகதீஷுடன் சிக்கியுள்ள சிறுமி அவரது சொந்த மகளா? அல்லது அவருக்கும் சிறுமிக்கும் என்ன தொடர்பு? உள்ளிட்ட விவரங்கள் அடுத்தகட்ட விசாரணையில் தெரிய வரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

