வேலூரில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி, காட்பாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். கல்லூரி முடிந்ததும், குடியாத்ததில் இருந்து பேரணாம்பட்டுக்கு செல்லும் தனியார் பேருந்தில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மாணவி அமர்ந்திருந்த இருக்கையின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் ஒருவர், மாணவியை பாலியல் ரீதியில் சீண்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, உடனடியாக தனது செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பேரணாம்பட்டுக்கு பேருந்து வந்ததும், மாணவியின் பெற்றோர்களும், உறவினர்களும் பேருந்தில் ஏறி பாலியல் தொல்லை கொடுத்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பேரணாம்பட்டு டவுன் மவுலானா வீதியை சேர்ந்த அப்துல் லத்தீப் (52) என்பதும், தோல் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் கூறுகையில், “சம்பவம் நடந்ததாக கூறப்படும் பேருந்தில் இருந்த பயணிகளிடமும், பேருந்து ஊழியர்களிடமும் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால், சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களின் படி அந்த நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

