இந்தி மொழியை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். அதே சமயத்தில், இந்தி திணிக்கப்படுவதையும் ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் அவர் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தி மொழி என்றாலே அதை எதிர்க்க வேண்டும் என்ற குருட்டு எண்ணத்தில் இருக்காதீர்கள். கண்மூடித்தனமான இந்தி எதிர்ப்பு நல்லதல்ல. அதே சமயத்தில், இந்தி திணிக்கப்படக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.
இந்தி திணிப்பை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தேசிய அளவில் தலைசிறந்த இடங்களை அடைய வேண்டும் என நீங்கள் விரும்பினாலோ அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உங்கள் எதிர்காலத்தை தொடர விரும்பினாலோ இந்தியை கற்றுக் கொள்வது மிக அவசியம்.
அதேபோல, ஆங்கிலமும் மிகவும் இன்றியமையாத மொழியாக உள்ளது. ஆங்கிலம் ஒரு வெளிநாட்டு மொழி என்றாலும், அது ஒரு சர்வதேச இணைப்பு மொழி என்பதை நாம் உணர வேண்டும். எனவே, ஆங்கிலத்தையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
முதலில் நாம் நமது தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதன் பிறகே மற்ற மொழிகளை கற்க வேண்டும். வீட்டில் உங்கள் தாத்தா பாட்டியுடனும், அண்டை வீட்டாருடனும் வழிபாட்டுத் தலங்களிலும் தாய்மொழியில் பேசுவதைப் பெருமையாக கருதுங்கள். அதுவே உங்கள் தாய்மொழியைப் பாதுகாக்கும் வழி.
கலாச்சாரம் இல்லாத கல்வி முற்றிலும் பயனற்றது என்பதை நம்புபவன் நான். கலாச்சாரம் என்பது மதம் சார்ந்தது மட்டுமல்ல, அது நம் முன்னோர்கள் நமக்கு வழங்கிய வாழ்க்கை முறையையும் சார்ந்தது.
கல்வி கற்று வெளிநாடுகளுக்கு சென்று, பொருள் ஈட்டுவதில் தவறில்லை. ஆனால் மீண்டும் உங்கள் தாய்நாட்டிற்கு திரும்பி வந்து சேவை செய்ய வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்களுக்கு வாழ்க்கை கொடுத்த சமூகத்திற்கு மீண்டும் எதையாவது நீங்கள் திருப்பித் தர வேண்டும்.
உங்களை பெற்றெடுத்த தாய், தந்தை மற்றும் கல்வி கற்பித்த ஆசிரியர்களை இறுதிவரை மதிக்க வேண்டும். உலகம் வேகமாக மாறி வருகிறது. நாளுக்கு நாள் புதுப்புது தொழில்நுட்பங்கள் வருகின்றன. எனவே, தொழில்நுட்பங்களை கற்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களை கற்று, அதில் நீங்கள் நிபுணத்துவம் அடைந்தால்தான், வாழ்க்கையில் அடுத்தடுத்து வரும் சவால்களை உங்களால் எதிர்கொள்ள முடியும். திறமைகளை மேம்படுத்தினால்தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும்” என வெங்கய்யா நாயுடு பேசினார்.

