நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் +2 மாணவர்களுக்கு வரும் 17 ஆம் தேதி முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இதே போன்று, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் 17 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி நிறைவடையும் என அட்டவணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் ஆன்லைன் வாயிலாக மதிப்பீடு செய்யப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதாவது, மாணவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், அதனை ஆசிரியர்கள் கணினி வாயிலாக மதிப்பீடு செய்து மதிப்பெண்களை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், திருத்தப் பிழைகள் குறைவதோடு ஆசிரியர்களுக்கு அலைச்சல் இருக்காது என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்ப, பள்ளிகளில் போதிய கணினி வசதிகள் இருப்பதை உறுதி செய்யுமாறும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
அதே சமயம், பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் கைப்படவே திருத்துவார்கள் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

