பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்திருந்த இஷான் கிஷன், முகமது ஷமி உள்ளிட்ட 5 வீரர்கள் இந்த முறை நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணி வீரர்களின் புதுபிக்கப்பட்ட ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்த பட்டியலில் ஏ+ என்ற கிரேடை பிசிசிஐ நீக்கியுள்ளது. முன்னதாக விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஏ+ கிரேடில் அங்கம் வகித்து வந்தனர்.
இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாலும், ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததாலும், அவர்களின் ஒப்பந்தமும் மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏ+ கிரேடை பிசிசிஐ முற்றிலுமாக நீக்கியுள்ளது.
தற்சமயம் அறிவிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஏ கிரேடில் ஷுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதே சமயம் பி கிரேடில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்பட மொத்தம் 11 வீரர்களும், கிரேட் சி பிரிவில் சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி, சாய் சுதர்ஷன் உள்பட 15 வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்தாண்டு பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்திருந்த 5 வீரர்கள் இந்த முறை ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், முகேஷ் குமார், இஷான் கிஷன் உள்ளிட்டோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதில் முகமது ஷமி கடைசியாக கடந்தாண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய நிலையில், அதன் பின் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதேசமயம் சர்ஃப்ராஸ் கான், ரஜத் படிதார் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அவர்கள் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள இஷான் கிஷனும் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் அவர் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இருப்பினும் அவரை ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடும்பட்சத்தில் அவரது பெயரும் ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

