‘‘இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த ஒப்பந்தம் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டதாக இருக்கும்’’ என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வந்தது. இந்த வரி 18 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இரு நாடுகளிடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளும் நிறைவான பலன்களை பெறும். குறிப்பாக இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிக பலன் அடைவார்கள்.
புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்திய வைரம், நகைகள், ஸ்மார்ட்போன்கள், மின்னணுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு முழுமையான வரிவிலக்கை அளிக்கும். இதன்மூலம் இந்திய தொழில் துறை அபார வளர்ச்சி அடையும். அமெரிக்காவுக்கான ஸ்மார்ட்போன்கள், மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும். இதேபோல மளிகைப் பொருட்கள், தேநீர், காபி, தேங்காய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கு அமெரிக்க அரசு வரிவிலக்கை அளிக்கும். இதனால் இந்திய விவசாயிகள் மிகுந்த பலன் அடைவார்கள்.
அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட வேளாண் விளைபொருட்கள் இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி வழங்கவில்லை. அமெரிக்காவின் சோளம், அரிசி, கோதுமை, ராகி, தானியங்களை இந்தியாவில் விற்பனை செய்ய எவ்வித சலுகையும் வழங்கவில்லை. இந்தியாவில் வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம், கொய்யா, காளான், கோகோ, கடுகு எண்ணெய், அன்னாசி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். இந்தியாவில் இறைச்சி, கோழி இறைச்சி, பால் பொருட்கள், சோயோபீன், சர்க்கரை, தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சிறிய பாதிப்பு கூட ஏற்படாது. இந்தியாவில் எத்தனால், புகையிலை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது.
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகள், குறு, சிறு தொழில் துறை, கைத்தறி, கைவினைத் துறைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த துறைகளின் நலன்கள் பாதுகாக்கப்படும். இந்தியாவின் விமான உதிரி பாகங்கள் உற்பத்தி துறை, இயந்திரவியல் பொருட்கள் உற்பத்தி துறை, மருந்து உற்பத்தி துறை அதிகப் பலன்களைப் பெறும்.
பிளாட்டினம், கடிகாரம், கைக் கடிகாரம், எண்ணெய் வகைகள், அலங்காரப் பொருட்கள், ரசாயனப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு வரி விலக்கு அளித்துள்ளது. இதேபோல பல்வேறு இந்திய வேளாண் விளைபொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்திய தொழில் துறை, இந்திய விவசாயிகள் நிறைவான பலன் அடைவார்கள்.
வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த லட்சியத்தை எட்ட அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஊக்கம் அளிக்கும். புதிய ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்ய உள்ளன. புதுமை கண்டுபிடிப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன. இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த ஒப்பந்தம் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

