சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை லீக் போட்டி நேற்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 84 ரன்களை சேர்த்தார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணியில் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஷுபம் ரஞ்சனே ஆகியோர் தலா 37 ரன்களையும், மிலிந்த் குமார் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுட, உலகக் கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். மேலும் இப்போட்டியின் மூலம் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
அந்தவகையில், இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை வென்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி 16 முறை ஆட்டநாயகன் விருதை வென்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் சூர்யகுமார் 17ஆவது முறையாக விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது. அதன்படி, 2024 முதல் 2026 வரையிலான டி20 உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்திருந்த நிலையில், தற்சமயம் இந்தியா 9 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

