தாளவாடியை அடுத்த அருள்வாடி கிராமத்தில் குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குட்டி யானையின் உடலை எடுக்க விடாமல் தாய் யானை நடத்திய பாசப்போராட்டம் காண்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
ஈரோடு மாவட்டம், ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானைகள் வெளியேறி ஊருக்குள் நுழைவது வழக்கம். உணவு தேடியும், குடிநீருக்காகவும் அவை ஊருக்குள் நுழைகின்றன.
இந்நிலையில், அருள்வாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதாக ஜீரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், குட்டி யானையின் உடல் அருகே செல்ல முயன்றனர்.
ஆனால், குட்டி யானையின் உடல் அருகே இருந்த தாய் யானை உட்பட 3 யானைகளும் குட்டியை நெருங்கவிடாமல் தடுத்தன. இதையடுத்து, வனத்துறையினர் அந்த யானைகள் காட்டுக்குள் செல்லும் வரை காத்திருந்தனர். ஆனால், நீண்டநேரமாகியும் யானைகள் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தன. குறிப்பாக, தாய் யானை குட்டியின் அருகிலேயே நின்று தும்பிக்கையால் அதை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, பொக்லைன் இயந்திரம் மூலம் சப்தம் எழுப்பிய வனத்துறையினர், யானைகளை காட்டுக்குள் விரட்டினர். பின்னர், இறந்த குட்டியானையின் உடலை, அதே இடத்தில் உடற்கூராய்வு செய்வதற்கான ஏற்பாடுகளை கால்நடை துறை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக்குழுவினர் செய்து வருகின்றனர். யானை உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது உடற்கூராய்வு அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும்.
கோடை காலம் நெருங்கியுள்ளதால் வனங்களில் கடும் வறட்சி ஏற்பட்டு ஆறுகளிலும், குளங்களிலும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பவானிசாகர், தாளவாடி, தூக்கநாயக்கன்பாளையம், சத்தியமங்கலம் ஆகிய ஊர்களுக்குள் உணவு, தண்ணீரை தேடி யானைகள் நுழைகின்றன.
அவ்வாறு நுழையும் யானைகள், ஊர்களில் உள்ள குட்டைகளில் தண்ணீர் குடிக்கின்றன. ஆனால், குட்டைகளிலும் நீர் வறண்டு போய் சேறும் சகதியுமாக உள்ளன. வேறு வழியில்லாமல் அந்த அழுக்கு நீரை யானைகள் குடிக்கின்றன. பெரிய யானைகளுக்கு இந்த நீர் ஒன்றும் செய்வதில்லை. ஆனால், சில சமயங்களில் குட்டி யானைகளின் வயிற்றுக்குள் செல்லும் இந்த அழுக்கு நீர், நோய்த்தொற்றை ஏற்படுத்தி விடுகின்றன.
இதனால் கடும் வயிற்று வலியால் அவதிப்படும் குட்டி யானைகள், சில நேரங்களில் இறந்துவிடுவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

