நெல்லையில் அருகே மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருநெல்வேலி, மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி. இவரது மகன் நசின் உசேன் (35). இவர் கோயம்புத்தூரில் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முகமது அஸ்மா (27). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் ஆன நிலையில் தற்போது முகமது அஸ்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவே வீட்டில் இருந்தபடி நசின் உசேன் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் வெளியே தெரிந்து விடாமல் இருக்க உடனடியாக உசேன் சிசுவின் உடலை புதைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்ததால் சிலர் மேலப்பாளையம் காவல் நிலையத்துக்கு தெரிவித்துள்ளனர். உடனே காவல் ஆய்வாளர் செந்தில் தங்கதுரை தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், நசின் உசேன் தனது மனைவிக்கு இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் கூட தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டிருந்த எச்சரிக்கை அறிவிப்பில், ”கர்ப்பிணி பெண்கள் பிரசவம் தரித்த 3 மாதத்தில் இருந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அவர்களுக்கான தடுப்பூசிகள் இரும்புச் சத்து மாத்திரைகள், ஸ்கேன் போன்றவை முறையாக கிடைக்கிறதா? என்பதை கிராமப்புற செவிலியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை: 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
மேலும் வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பது தாய்க்கும், சேய் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் பிரசவத்திற்கு பிறகு ரத்தப் போக்கு அதிகரித்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில் நடக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

