பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கடந்த சில நாட்களாகவே சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அந்த வகையில், இன்று விடிந்த பிறகும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சாலைகளில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.
குறிப்பாக, சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் பார்வைத்திறன் குறைந்து கொண்டே வந்தது. காலை 6.30 மணிக்கு மேல் ஓடுபாதை முற்றிலும் பனியால் மறைந்துவிட்டது. இதனால், விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன.
குறிப்பாக, காலை 6.35 மணிக்கு மும்பையிலிருந்து 157 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ், காலை 7 மணிக்கு மும்பையிலிருந்து 149 பயணிகளுடன் வந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது.
அதேபோன்றே, கோலாலம்பூரில் இருந்து 180 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ், காலை 7.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து 164 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மற்றும் காலை 8 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து 162 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும் சென்னையில் தரையிறங்க முடியாமல் சிரமப்பட்டன.
அந்த விமானங்களை தொடர்பு கொண்ட சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், பெங்களூரு மற்றும் திருப்பதி ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பினர். தொடர்ந்து அந்த 5 விமானங்களும் பெங்களூரு, திருப்பதி விமான நிலையங்களில் பத்திரமாகத் தரையிறங்கியது. அதேபோல, சென்னையிலிருந்து பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அந்தமான், திருச்சி, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட இருந்த 10 விமானங்களும் பனிமூட்டம் காரணமாக தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதையும் படிங்க: வேலூரில் தவெக பொதுக்கூட்டம்: காவல்துறை அனுமதி?
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை ஓடுபாதை பார்வைத்திறன் 1,500 மீட்டராக இருந்தது. காலை 6.30 மணிக்கு 350 மீட்டராகவும், காலை 7.30 மணிக்கு 150 மீட்டராகவும் குறைந்து விட்டதால், பாதுகாப்பு கருதி விமானங்கள் பெங்களூரு, திருப்பதி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. அந்த விமானங்கள் காலை 9:30 மணிக்கு பிறகு மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
அதேபோன்று, சென்னைக்கு வரும் புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகிறது. குறிப்பாக, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூரிலிருந்து சென்னை வரும் மின்சார ரயில்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டது. அதேபோல, சென்னைக்கு வரும் கும்மிடிப்பூண்டி சூளூர்பேட்டை மின்சார ரயில்களும் தாமதமானதால் பயணிகள் சிரமப்பட்டனர்.

