இன்று நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 828 பதவிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற தேர்வர்களுக்கான முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் 47 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக காலை முதலே மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருகை தந்தனர்.
இந்நிலையில், சில இடங்களில் குரூப் 2 முதன்மை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முறைாக தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு அறை ஒதுக்கப்படாத நிலையில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இன்று நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறியுள்ளார். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

