தவெகவுக்கும் திமுகவுக்கு இடையேதான் போட்டி என விஜய் கூறி வரும் சூழலில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-என்.டி.ஏ இடையேதான் போட்டி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
விருதுநகர் அருகே கல்குறிச்சியில் திமுக இளைஞரணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “சமூக நீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி, மொழி இன உணர்வு ஆகியவை திமுகவின் அடிப்படை கொள்கைகள். இதில் தமிழ் மொழிக்கு வந்த ஆபத்துக்களை பல முறை போராடி வென்ற இயக்கம் திமுக. இருந்தாலும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு முயற்சி நமது தலைக்கு மேல் கத்திபோல தொங்குகிறது. மொழியை அழித்தால், நமது அடையாளத்தை அழித்துவிடலாம் என சில எண்ணுகின்றனர். இதனை இளைஞர்களாகிய நீங்கள் முறியடிக்க வேண்டும்.
நமது இந்தியா கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டமைப்பு. ஆனால், சுதந்திர தினத்தில் மாநில முதலமைச்சர்களுக்கு கொடி ஏற்றும் உரிமை கூட தரப்படவில்லை. அப்படிப்பட்ட உரிமையை பல்வேறு மாநிலங்களுக்கு பெற்றுத்தந்தது திமுகதான். இதனை மாற்ற பல முயற்சிகள் நடைபெறுகிறது. மாநில அரசுகளை நகராட்சிகளை போன்று மாற்ற முயற்சி நடக்கிறது. மாநிலக் கட்சிகளே இருக்கக்கூடாது என்று மத்திய பாஜக நினைக்கிறது. ஆனால், அவர்களால் நெருங்கக் கூட முடியாத மாநிலமாகவும், சுயமரியாதையை காப்பாற்றி தலைநிமிர்ந்த மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.
இளைஞர்கள் சக்தி பெருகிவரும் வரை, ஒரு நூற்றாண்டு அல்ல, பல நூற்றாண்டுகள் ஆனாலும் திமுகவை எவராலும் நெருங்க முடியாது. தமிழ்நாட்டில் 7-வது முறையாக திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். இதில் எதிரிகளுக்குக்கூட சந்தேகமில்லை. அதற்காக, நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது. தேர்தல் வேலைகளைப் பரபரப்பாக மேற்கொள்ள வேண்டும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டுக்கும் (திமுகவுக்கும்) – என்.டி.ஏ-வுக்கும் இடையேதான் போட்டி. இதில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் தோல்வி என்பது ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும், இதுவரை இல்லாத மிகப்பெரிய தோல்வியை தே.ஜ. கூட்டணிக்கு தமிழ்நாடு அளிக்க வேண்டும். அதற்காக, இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். என்னோடு இளைஞரணியில் இணைந்து செயல்பட்டவர்களில் 10 பேர் தற்போது அமைச்சராகவும், 24 பேர் எம்எல்ஏவாகவும், 4 பேர் எம்.பியாகவும் உள்ளார்கள். ஆகையால், இளைஞர்களின் உழைப்புக்கு ஏற்ப வாய்ப்பு நிச்சயம் தேடிவரும்” என்றார்.
இதையும் படிங்க: 200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெல்லும் – நடிகர் வடிவேலு ஆருடம்
மேலும் பேசிய அவர், “ஐந்தாண்டு கால ஆட்சியில், திமுக நிறைவேற்றிய அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவிலேயே மாநில வளர்ச்சி, சாதனைகள், தரவரிசை பட்டியல் என அனைத்திலும் முதலிடம் பெற்று தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார்’ மாநிலமாக உள்ளது. முற்போக்கு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாட்டுக்கு நிகர் தமிழ்நாடுதான்” என விமர்சித்தார்.

