தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவிவருகிறது.
திமுக கூட்டணியில், கடந்தத் தேர்தலில் இருந்த கட்சிகள் அப்படியே தொடர்வதாக சொல்லப்பட்டுவருகிறது. மறுபக்கம் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே இருந்து வெளியேறிய கட்சிகள் மீண்டும் இணைந்துவருகின்றன.
இந்நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் நியூஸ்18 தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர், “திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் இல்லை என்றால் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்வதை கட்சியின் 99 சதவிகிதம் கட்சியினர் விரும்பவில்லை. ஆனால், இந்த நிமிடம் வரை திமுகவுடன் தான் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம்.
தொடர்ந்து முதலமைச்சர் சந்திக்கும்பொழுதெல்லாம் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். வடமாவட்டங்களில் அதிக வாக்குகளை வைத்துள்ள தங்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உரிய அங்கீகாரம் கொடுத்ததைப் போல தற்பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கொடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது.
ஒரே தொகுதி தான் என்ற நிலை நீடித்தால் இன்னும் இரண்டு வாரத்தில் பொதுக்குழு கூட்டி அடுத்த கட்ட முடிவை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

