நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த 1.5 கோடி ரூபாய் அபராதம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக லிஜய் தொடர்ந்த வழக்கில் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
‘புலி’ படத்திற்கான வருமானத்தை மறைத்ததாக நடிகர் விஜய்க்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து 2019ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு முடியும் வரை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதன் பின்னர் கடந்த ஜனவரி 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை கடந்த 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். வருமான வரி சட்டத்தின் படி 3 ஆண்டுகளுக்கு பின் காலதாமதமாக 2022ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வருமான வரித்துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த மேல்மூறையீடு முடிந்த 6 மாத கால அவகாசத்துக்குள் அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான். அதனால் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 23-ம் தேதி, இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் “நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் செல்லும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “வருமான வரித்துறையின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், அதே நேரத்தில் நடிகர் விஜய் வேறு கோரிக்கையுடன் வருமான வரித்துறை முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகலாம்” எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ள நீதிபதி, விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

