சென்னை: வேப்பேரி பகுதியில் உரிமையாளர் போல நடித்து வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.18 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை புரசைவாக்கம் பண்டாரம் தெருவில் வசித்து வருபவர் கௌசர் ஜஹான் (65). இவர் கடந்த 2025ம் ஆண்டு குத்தகைக்கு வீடு தேடி கொண்டிருந்த போது அவருக்கு தெரிந்த தரகர் ஒருவர் சேத்துப்பட்டில் வசிக்கும் முகமது ரிஸ்வான் என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது முகமது ரிஸ்வான் தனக்கு சொந்தமாக புரசைவாக்கம் பண்டாரம் தெருவில் உள்ளதாக ஒரு வீட்டை காண்பித்து குத்தகை பணம் ரூ.18 லட்சம் என நிர்ணயம் செய்து ஒப்பந்தம் செய்துள்ளனர். பின்னர் கௌசர் ஜஹான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 தவணைகளாக மொத்தம் ரூ.18 லட்சம் பணத்தை முகமது ரிஸ்வானிடம் கொடுத்தாக கூறப்படுகிறது.
பின்னர் குத்தகை ஒப்பந்த பத்திரம் போட்டு கடந்த 4 மாதங்களாக அந்த வீட்டில் கௌசர் ஜஹான் வசித்து வந்தார். இந்நிலையில், முஸாமில் அன்சார் என்பவர் அங்கு வந்து இது தனது வீடு எனக்கூறி, தான் வெளியூர் சென்றிருந்த நிலையில் உங்களை யாரோ ஏமாற்றி இந்த வீட்டில் குத்தகைக்கு விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கௌசர் ஜஹான், முகமது ரிஸ்வான் மீது உரிய நடவடிக்கை எடுத்து குத்தகை பணம் ரூ.18 லட்சத்தை பெற்றுத் தருமாறு சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் முகமது ரிஸ்வானை தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து வேப்பேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னையில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து வேப்பேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது முகமது ரிஸ்வான் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் நண்பர் ஒருவருடன் சேர்ந்து வீட்டின் உரிமையாளர் போல நடித்து, கௌசர் ஜஹான் இடம் 18 லட்சம் பெற்று வீட்டை குத்தகைக்கு விட்டு மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், முகமது ரிஸ்வான் இதுபோல பல நபர்களிடம் வேப்பேரி பகுதியில் பல வீடுகளை காண்பித்து உரிமையாளர் போல நடித்து குத்தகைக்கு விட்டு, பணம் பெற்று மோசடி செய்திருப்பதும் அம்பலமானது. இதையடுத்து முகமது ரிஸ்வான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

