ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். மேலும் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறகும் இந்திய அணி மீண்டும் கோப்பையை தன்வசப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.
அதற்கேற்ப, இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருக்கும் இந்திய அணி, பிப்ரவரி 7 ஆம் தேதி தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக பலப்பரீட்சை நடத்தும் இந்திய அணி, அடுத்தடுத்த போட்டிகளில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் மோதவுள்ளது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணைகள் குறித்து பார்ப்போம்.
இந்திய அணியின் பலம்
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பேட்டர்களுடைய அதிரடியான ஆட்டம், எதிரணி பவுலர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை விளாசும் வீரர்கள், போட்டியை எந்த நேரத்திலும் மாற்றும் திறனுடையவர்கள், சூழல்நிலைக்கு ஏற்ப நிதானமாக விளையாடும் அனுகுமுறை என அனைத்து சூழ்நிலைகளுக்கு ஏற்ற பேட்டர்கள் அணியில் உள்ளனர்.
இவர்களில் இஷான் கிஷன், அபிஷேக் சர்மா ஆகியோரால் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட முடியும். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கும் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரால் சூழ்நிலைக்கு ஏற்ப நிதானமாகவும், அதே சமயம் அதிரடியாகவும் விளையாடும் திறனுடையவர்கள். ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஷிவம் தூபே உள்ளிட்டோரால் ஒரு சில பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்ற இயலும்.
பேட்டிங் ஒருபக்கம் வலுவாக இருக்க, மறுபக்கம் அணியின் பந்துவீச்சும் எதிரணி பேட்டர்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இருக்கும் நிலையில், சுழற்பந்துவீச்சை கையாள வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோருடன், ஆல் ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேலும் இருப்பது அணியின் மிகப்பெரும் பலமாக உள்ளது.
இவர்கள் தவிர, பிளேயிங் லெவனுக்கு வெளியே சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோரும் மற்றவர்களும் பேக்கப் வீரர்களாக உள்ளனர். இவர்களில் சஞ்சு சாம்சன் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டிருந்தாலும், சமீபத்திய ஃபார்ம் காரணமாக அவர்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சற்று கடினமான காரியமாகவே உள்ளது.
இந்திய அணியின் பலவீனம்
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் பலவீனம் என்று சொல்வதற்கு எந்த விசயங்களும் இல்லை. இருப்பினும் அணியின் டாப் ஆர்டர் வீரர்களை நம்பியே மிடில் ஆர்டர் பேட்டர்களின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. ஒருவேளை டாப் ஆர்டர் வீரர்கள் ரன்களை சேர்க்க தவறும்பட்சத்தில், அது மிடில் ஆர்டர் பேட்டர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுப்பதாக இருந்துள்ளது. பவுலிங்கை பொறுத்தவரையில் ஹர்ஷித் ரானா, குல்தீப் யாதவ், பும்ரா உள்ளிட்டோர் ரன்களை கட்டுப்படுத்த தவறி வருவது சற்று நெருக்கடியை உண்டாக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல் (துணை கேப்டன்), இஷான் கிஷான், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.
இந்திய அணியின் போட்டி அட்டவணை
பிப்ரவரி 7- இந்தியா vs அமெரிக்கா – வான்கடே மைதானம், மும்பை
பிப்ரவரி 12 – இந்தியா vs நமீபியா – அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
பிப்ரவரி 15 – இந்தியா vs பாகிஸ்தான், ஆர்.பிரேமதாசா மைதானம், கொழும்பு
பிப்ரவரி 18 – இந்தியா vs நெதர்லாந்து, நரேந்திர மோடி மைதானம், அஹ்மதாபாத்
இதையும் படிங்க
யு19 உலகக் கோப்பை 2026: ஆரோன் ஜார்ஜ் அபார சதம்; 10ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா
உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அறிவிப்பு
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும் அனைத்து லீக் போட்டிகளும் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. அதே சமயம் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக திட்டமிட்டபடி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன.

