ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3 நாட்களாக குறைந்துவந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது.
உலக சந்தையின் தங்கத்தின் மதிப்பானது கூடிக்கொண்டே போகிறது. இது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் குறைந்த அளவில் தங்கம் வாங்குவோருக்கு கவலையளிப்பதாகவே உள்ளது. கடந்த ஆண்டு முதல் தொடங்கிய தங்கம் விலை உயர்வு இன்னும் ஒருசில ஆண்டுகளுக்கு இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். 2025 இறுதியில் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டிய நிலையில், இந்த ஆண்டு பாதிக்குள்ளாகவே ரூ. 2 லட்சத்தை தாண்டலாம் என கணித்துள்ளனர்.
அதற்கேற்றாற்போல், கடந்த மாதம் முழுவதும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுவந்தது. குறிப்பாக, ஜன.29ஆம் தேதி உச்சபட்சமாக ஒரே நாளில் ரூ.9,520 அதிகரித்தது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறையத் தொடங்கியது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களுக்கு தங்கம் முக்கியமான சொத்தாக பார்க்கப்படுகிறது. அதனால் மத்திய பட்ஜெட்டின் அறிவிப்பால் பங்குச்சந்தை சரியவும், அது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, தொடர்ந்து 3 நாட்கள் தங்கம் விலை தினந்தோறும் ரூ.7,600 குறைந்தது.
வாரத்தின் முதல் நாளான நேற்று (பிப்.2) சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 950 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ரூ. 80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,030க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 640 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரிப்பானது வெள்ளி விலையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. வெள்ளியையும் பாதுகாப்பான உலோகமாக கருதியதால் அதன்மீதும் உலக சந்தையில் முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தை விட வெள்ளி விலை சரசரவென ஏறிக்கொண்டே போனது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜன.31 அன்று மட்டும் கிராமுக்கு ரூ. 85 குறைந்தது. நேற்றும் (பிப்.2) ரூ. 20 குறைந்த நிலையில், இன்றும் ரூ. 20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 280க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து ரூ. 2,80,00க்கு விற்பனை செய்யப்படுகிறது.

