கோவை அருகே மனைவி, மகளுடன் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாந்திமேடு தம்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (48 ). இவர் நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் (தமிழ்நாடு மின்சார வாரியம்) ஜுனியர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இலக்கியா செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 10 வயதில் மகள் இருந்தார்.
இந்த நிலையில், அவர்களது வீட்டில் கணவன், மனைவி, குழந்தை என 3 பேரும் சடலமாக கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சமபவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கமலேஷின் மனைவி இலக்கியா கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மேலும், அதற்கு சிகிச்சை எடுத்தும் சரியாகாததால் மனவருத்தத்தில் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், தற்கொலைக்கு முன்னர் கமலேஷ் செல்ஃபோனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ”தனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள மார்பக புற்றுநோயால் அவர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார். அதற்கு சிகிச்சை எடுத்தும் கூட நோய் தாக்கம் குறையவில்லை. இதனால் நாங்கள் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள போகிறோம். எங்களது இறப்பிற்கு பிறகு உடல்களை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்யுங்கள். எனது சேமிப்பு பணத்தை சிஎஸ்ஐ தேவாலயத்திற்கு அளிக்க வேண்டும். எங்களது உடல்களை என்னுடன் பணியாற்றும் ஊழியர்கள் சேர்ந்து அடக்கம் செய்திட வேண்டும்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

