புதுச்சேரிக்கு பிப்ரவரி 11-ல் பிரதமர் மோடி வருகிறார். இதையடுத்து விழா நடைபெறவுள்ள இடத்தில் இன்று மாலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வரவுள்ளதால் விழா நடத்தும் இடத்தை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானம், விமான நிலைய ஹெலிபேட் மைதானம், உப்பளம் எக்ஸ்போ மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இதுபற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, புதுச்சேரிக்கு வரும் 11-ல் பிரதமர் மோடி வருகிறார். அரசின் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார் என்றனர். அண்மையில் புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸின் லட்சிய ஜனநாயக கட்சியினர் சந்தித்தனர்.
அக்கட்சி பாஜகவுடன் இணைகிறதா என்று மாநிலத் தலைவர் ராமலிங்கத்திடம் கேட்டதற்கு, “மத்திய அமைச்சர் அறையிலிருந்து வெளியே வரும்போது வந்து நின்று போட்டோ எடுத்தார்கள். லஜக பாஜகவுடன் இணைய வாய்ப்பில்லை. கூட்டணியில் வர வாய்ப்புள்ளது. அதை தலைமை முடிவு செய்யும்” என்றார்.

